𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக அண்மையில் தெரிவு செய்யப்பட்ட சிரேஸ்ட சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பர் அவர்களின் விருந்துபசார நிகழ்வுக்காக கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரின் அழைப்பை ஏற்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
மேலும் இந்நிகழ்வில் கல்முனை சிவில் மேல்முறையீட்டு உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு வி. ராம கமலன், கல்முனை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு ஜே. ட்ரொட்ஸ்கி, கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு ஏ.எம்.எம். றியாழ், கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு எம்.எஸ். எம். சம்சுதீன், உட்பட கல்முனை சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவர்கள், தற்போதைய செயலாளர் ஏ.ஜீ.பிரேம் நவாத், உட்பட கல்முனை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
எதிர்காலத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் இடையே நல்லுறவை பேணுவதற்கும், பரஸ்பரம் பரிந்துரைகளை மேற்கொள்வதற்கும் தாய்ச் சங்கத்தின் தலைவரின் வருகை காத்திரமானதாக அமைந்துள்ளதாக இங்கு உரையாற்றிய சிரேஷ்ட சட்டத்தரணிகள் உரைகளில் கருத்துரைகள் முன் வைக்கப்பட்டதுடன் சட்டத்தரணிகளின் நலனோம்புகை விடயங்கள் தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன் புதிதாக தலைமை பொறுப்பேற்றுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பரின் ஆளுமைகள் தொடர்பிலும் பேசினர்.
இங்கு பேசிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய தனது பல்கலைக்கழக காலத்தின் தோழியான தற்போதைய கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவி ஆரிக்கா காரியப்பரின் ஆளுமைகள், திறமைகள் பற்றி சிலாகித்து பேசியதுடன் இலங்கையின் நீதித்துறையில் சட்டத்தரணிகளின் வகிபாகம் தொடர்பில் உரையாற்றினார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேசிய தலைவரைக் கெளரவிக்கும் முகமாகவும், கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட அரிக்கா காரியப்பரைக் கெளரவிக்கும் முகமாகவும் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பொன்னாடையும் போர்த்தப்பட்டது.
















0 comments: