Saturday, October 3, 2026

இறக்காமம் பிரதேச செயலகத்தில் கிராமியக் கலைகளின் அரங்கேற்றமும் சிரேஷ்ட கலைஞர்கள் கௌரவிப்பும்…!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 இறக்காமம் பிரதேச செயலகத்தில் கிராமியக் கலைகளின் அரங்கேற்றமும் சிரேஷ்ட கலைஞர்கள் கௌரவிப்பும்…!


✍️ ஏ.எச்.றகீப்


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………………


✅👉 கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் ‘வத்ஸர பியவர’ வேலைத்திட்டத்தின் கீழ், பாரம்பரிய மற்றும் கிராமியக் கலைகளைப் பாதுகாத்து, அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரியக் கலை நிகழ்வும் பொல்லடி அரங்கேற்ற நிகழ்வும் 2026.09.30 புதன்கிழமை இறக்காமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்-ஷெய்க் எம்.எஸ்.எம். றஸ்ஸான்(நளீமி) அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், உதவிப் பிரதேச செயலாளர் அய்மா நிஃமத்துல்லா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


பாரம்பரியக் கலை வடிவங்களின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவதுடன், அழிந்து வரும் கிராமியக் கலை மரபுகளைப் பாதுகாத்து, அவற்றை எதிர்கால சந்ததியினரிடம் கொண்டு செல்லும் நோக்கிலும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 


குறிப்பாக, கிராமிய மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்துள்ள பொல்லடி, சீனடி மற்றும் வாள் வீச்சு போன்ற பாரம்பரியக் கலை வடிவங்களுக்கு புத்துயிரளிக்கும் வகையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.


கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ. நஹ்பீசா அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிருவாக உத்தியோகத்தர் ஐ.எல். றஸாக், மேலதிக மாவட்ட பதிவாளர் எஸ்.எம். சுஜாத், நூலகம்.கொம் நிறுவனத்தின் கள ஆய்வளர்களான டாக்டர். ஏ. அனோஜன், பீ. ஜோஹ்ன் டிக்ஷ்சன் ஆகியோரும் கௌரவ அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர். 


மேலும், கலாசார உத்தியோகத்தர் ஏ. டப்யூ. நாளிகா தமயந்தி, இறக்காமம் பிரதேச கலாசார அதிகார சபையின் உப தலைவரும் உளவளத்துணை உத்தியோகத்தருமான ஏ.எச். றகீப், பிரதேச கலாசார அதிகார சபையின் உப தலைவரும் ஓய்வு பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் யு.எல். யாசீன் பாவா உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.


நிகழ்வின் முக்கிய அம்சமாக, பொல்லடிக் கலைக்கான பயிற்சிப் பட்டறையில் பயிற்சி வழங்கிய வளவாளர்களான கே.எல். அலியார் மற்றும் எம்.எஸ். சித்தீக்(சமூகூன்) ஆகியோரின் அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டி, உதவிப் பிரதேச செயலாளர் அவர்களினால் நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்படது.


அதேவேளை, நூலகம் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் தமிழ் முஸ்லிம் சமூகங்களின் கலைப் பாரம்பரியங்களை ஆவணப்படுத்தி எண்ணிமப்படுத்தும் பணிக்குப் பங்காற்றிய இறக்காமத்தின் சிரேஷ்ட கலைஞர்களான 

கலாபூசணம் கவின்கலைப் பாடகர் எச்.எல். அப்துல் ஸலாம், அண்ணாவியர் கலை முதுசம் எம்.எஸ். சித்தீக், கட்டுப் பாடகர் எம்.ஏ. ஆதம் லெப்பை மற்றும் கவிஞர் எஸ்.எல். சுபைதீன் ஆகியோர் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். 


மேலும், நடைபெற்ற பொல்லடி பயிற்சிப் பட்டறையில் பங்கேற்று பயிற்சி பெற்ற கமு/சது அல்-அஷ்ரப் மத்திய கல்லூரி மற்றும் கமு/சது அமீர் அலிபுரம் வித்தியாலய மாணவர்களுக்கு அவர்களின் பங்கேற்பையும் திறமையையும் பாராட்டும் வகையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


இந்நிகழ்வில் பாரம்பரிய கலைகளின் தொடர்ச்சியான வளர்ச்சிக்குப் பங்களித்து வரும் சீனடி மற்றும் வாள் வீச்சுக் கலைஞர்களான எஸ்.ரி. நப்றீல், எச்.ஏ. தாஹிர், எ.எல். உமர், எ.எச்.எம். அசாம் மற்றும் எஸ். ஹாரூன் ஆகியோரும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.


பொல்லடி அரங்கேற்றத்தின் போது பயிற்சி பெற்ற மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியதுடன், பாரம்பரியக் கலை வடிவங்களின் சிறப்பையும் அழகியலையும் பார்வையாளர்களுக்கு எடுத்துக்காட்டினர். 


மாணவர்களின் ஆர்வமிக்க பங்கேற்பு, பாரம்பரியக் கலைகளை இளைய தலைமுறையினர் மத்தியில் கொண்டு செல்வதற்கான சிறந்த முன்னுதாரணமாக அமைந்தது.


கிராமியக் கலைகள் என்பது வெறுமனே பொழுதுபோக்கு சார்ந்த நிகழ்வுகள் அல்ல; அவை ஒரு சமூகத்தின் வரலாறு, பண்பாடு, வாழ்வியல், மரபு, ஒற்றுமை மற்றும் சமூக நினைவுகளைப் பிரதிபலிக்கும் பண்பாட்டுச் சொத்துகளாகும். எனவே, இத்தகைய கலை வடிவங்களைப் பாதுகாப்பதற்கும், அவற்றில் தேர்ச்சி பெற்ற சிரேஷ்ட கலைஞர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதற்கும் இளைய தலைமுறையினருக்கு முறையான பயிற்சிகளை வழங்குவதற்கும் இந்நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.


கலைஞர்களின் அனுபவமும் மாணவர்களின் ஆர்வமும் ஒன்றிணைந்த இந்நிகழ்வு, இறக்காமம் பிரதேசத்தின் பாரம்பரிய கலைப் பண்பாட்டை அடுத்த தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லும் ஒரு முக்கியமான கலாசாரப் பாலமாக அமைந்தது.


பாரம்பரிய கலைகளின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும், கிராமியக் கலைஞர்களின் திறமைகளை ஊக்குவிப்பதற்கும், எதிர்காலத்தில் இவ்வாறான பயிற்சிப் பட்டறைகள், அரங்கேற்றங்கள் மற்றும் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் இந்நிகழ்வு எடுத்துக்காட்டியது.


🌎 www.mihrajnews.com


✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்

















SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: