Thursday, July 16, 2026

கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு அவசியம்..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு அவசியம்..!


✅👉 கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்..!


✍️ எஸ். சினீஸ் கான் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………….


✅👉 தொழில் ரீதியான சுமை, கடற்கொள்ளையர்களின் தொல்லை மற்றும் வி.எம்.எஸ். (VMS) கட்டணச் சுரண்டல்கள் ஆகியவை கிழக்கு மாகாண மீனவர்களை கடுமையாகப் பாதித்துள்ளன. இது அவர்களின் வாழ்வுரிமையுடன் நேரடியாக தொடர்புடைய பிரச்சினை என்பதால், அதற்குரிய தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.


தொடர்ந்து உரையாற்றிய அவர்,


"ஏனைய கரையோர மாவட்டங்களை விட மட்டக்களப்பு, அம்பாரை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அதிகமான மக்கள் தங்களின் பிரதான வாழ்வாதாரமாகக் கடற்றொழிலையே நம்பியுள்ளனர்.


இப்பகுதிகளில் சுமார் 1,000 படகுகள் சுழற்சி முறையில் தொடர்ச்சியாகக் கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மீனவக் குடும்பங்கள் தங்களது அன்றாட வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றன.


தற்போது எமது மீனவர்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சினை கடலில் இடம்பெறும் மீன் திருட்டும் கடற்கொள்ளையும் ஆகும். ஒரு முழுமையான வலைத் தொகுதியை வாங்குவதற்கு சுமார் ஒரு இலட்சம் ரூபாய் வரை செலவாகின்றது. அவற்றைப் பழுதுபார்ப்பதற்கே நாளொன்றுக்கு சுமார் 4,000 ரூபாய் வரை மேலதிகச் செலவு ஏற்படுகிறது.


திருகோணமலை முதல் பொத்துவில் வரையிலான பகுதிகளில் பலமுறை போராட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும், இந்தப் பிரச்சினைக்கு இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை.


மீனவர்களின் பாதுகாப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட வி.எம்.எஸ். கருவி, நடைமுறையில் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.


ஆரம்பத்தில் இந்தக் கருவி இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும், பின்னர் 35,000 ரூபாய் முதல் 70,000 ரூபாய் வரை பல்வேறு கட்டணங்கள் அறவிடப்பட்டுள்ளன. அதோடு, மாதாந்திரமாக 6,000 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுவது சாதாரண மீனவர்களுக்கு பாரிய பொருளாதாரச் சுமையாக உள்ளது.


'மின்னல் தாக்காது' என அதிகாரிகள் உறுதியளித்த வி.எம்.எஸ். கருவி பொருத்தப்பட்ட பல படகுகள் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி, அவற்றின் ஆல்டர்னேட்டர்கள், மின்கலங்கள் மற்றும் மின்சார அமைப்புகள் சேதமடைந்துள்ளதால் பல இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.


கடலில் சிக்னல் துண்டிக்கப்பட்டால், அதற்கான காரணங்களை முறையாக ஆராயாமல், மீனவர்களின் கடலுக்குச் செல்லும் அனுமதிப்பத்திரங்கள் அதிகாரிகளால் இடைநிறுத்தப்படுகின்றன. மேலும், பழுதுபார்ப்பு என்ற பெயரில் 'சிந்து மெரைன்' நிறுவனம் இரண்டரை இலட்சம் ரூபாய் முதல் ஆறு இலட்சம் ரூபாய் வரை கட்டணங்களை அறவிடுவதாக அறியப்படுகிறது.


அதேபோன்று, கடந்த காலத்தில் கானான் படகுகளுக்கு வழங்கப்பட்ட 14 நாள் அனுமதிப் பத்திர (பாஸ்) நடைமுறை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. வரவிருக்கும் கச்சான் காற்று காலத்தில் மீனவர்கள் தினமும் கடலுக்குச் செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. இரவு முழுவதும் தொழிலில் ஈடுபட்டு அதிகாலையில் கரை திரும்பும் அவர்கள், அனுமதிப்பத்திர நடைமுறைகளுக்காக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அலுவலகங்களில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் போதிய ஓய்வின்றி மீண்டும் கடலுக்குச் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.


தொழில் ரீதியான சுமை, கடற்கொள்ளையர்களின் தொல்லை மற்றும் வி.எம்.எஸ். கட்டணச் சுரண்டல்கள் ஆகியவை மீனவர்களை கடுமையாகப் பாதித்துள்ளன. எனவே, இப்பிரச்சினைகளுக்கு அமைச்சு தலையிட்டு உரிய தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இதன் அடிப்படையில் பின்வரும் கேள்விகளுக்கு முறையான பதிலை எதிர்பார்க்கிறேன்.


• கடற்கொள்ளையர்களைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?


• வி.எம்.எஸ். கருவிகளுக்கான மாதாந்திர கட்டணங்களையும், அதிகப்படியான பழுதுபார்ப்புக் கட்டணங்களையும் மறுபரிசீலனை செய்து குறைக்கவும், மின்கலப் பாதுகாப்பிற்கான வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுமா?


• கச்சான் காற்று காலத்தைக் கருத்தில் கொண்டு, மீனவர்களின் ஓய்வு நேரப் பாதிப்பைத் தவிர்க்கும் வகையில் பாஸ் நடைமுறைகளை எளிமைப்படுத்தி, கானான் படகுகளுக்கு பழையபடி 14 நாள் அனுமதிப் பத்திர நடைமுறையை மீண்டும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதிலளித்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், குறித்த கேள்விகளுக்கான விரிவான பதிலை உடனடியாக வழங்க முடியாத நிலையில் இருப்பதாகவும், அடுத்த பாராளுமன்ற அமர்வில் விளக்கமான பதிலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்

SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: