📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் 09ஆவது ஆண்டு நினைவு – கத்தமுல் குர்ஆன் நிகழ்வும் விசேட துஆ பிரார்த்தனையும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
நிருபர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………………
✅👉 கரையோர மக்களின் அபிவிருத்திக்கும், சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் தனது வாழ்நாளையே அர்ப்பணித்து அழியாத தடம்பதித்த முன்னாள் அமைச்சரும் மக்கள் நேசத் தலைவருமான மர்ஹூம் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் 09ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கத்தமுல் குர்ஆன் நிகழ்வும் விசேட துஆ பிரார்த்தனையும் நேற்று (25) அவரது இல்லத்தில் ஆன்மீக உணர்வுடனும், கண்ணியமான சூழலிலும் நடைபெற்றது.
இந்நிகழ்வில், புனித அல்குர்ஆன் முழுமையாக ஓதப்பட்டு அதன் நன்மைகள் மர்ஹூம் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் ஆன்மாவிற்கு ஹதிய்யா செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அல்லாஹ் தஆலா அவர்களுக்கு உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸ் அருள்புரிய வேண்டுமென உலமாக்களின் தலைமையில் உருக்கமான விசேட துஆ பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
பின்னர், மர்ஹூம் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் அடக்கஸ்தலத்திற்குச் சென்று விசேட துஆ பிரார்த்தனையும் நடத்தப்பட்டது. அங்கு அவரது சமூக, அரசியல் மற்றும் மனிதநேயப் பணிகள் நன்றியுணர்வுடன் நினைவுகூரப்பட்டதுடன், அவர் விதைத்த மக்கள் சேவையின் விதைகள் இன்றும் மக்களின் வாழ்வில் நிழல் தரும் மரங்களாக வளர்ந்து நிற்பதாக கலந்து கொண்டோர் உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டனர்.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் கலந்து கொண்டு மர்ஹூம் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் மக்கள் சேவைகளையும் அரசியல் பங்களிப்புகளையும் நினைவுகூர்ந்தார்.
மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், அம்பாறை மாவட்ட செயலாளர், கட்சியின் முக்கியஸ்தர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், பள்ளிவாசல் தலைவர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், சமூக மற்றும் அரசியல் பிரமுகர்கள், மர்ஹூமின் குடும்பத்தினர், உறவினர்கள், அபிமானிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு, மர்ஹூம் அவர்களின் மஃபிரத்திற்காகவும் உயர்ந்த சுவனப் பதவிக்காகவும் பிரார்த்தனை செய்தனர்.
மர்ஹூம் ஏ.ஆர். மன்சூர் அவர்கள் கல்வி வளர்ச்சி, சமூக மேம்பாடு, அடிப்படை வசதி அபிவிருத்தி, இளைஞர் முன்னேற்றம் மற்றும் மக்களின் வாழ்வாதார முன்னேற்றம் ஆகிய துறைகளில் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவைகள் இன்றளவும் மக்களின் இதயங்களில் நிலைத்திருக்கின்றன. அவர் ஒரு அரசியல் தலைவராக மட்டுமன்றி, மனிதநேயம், பணிவு மற்றும் மக்கள் நலனையே தனது அரசியல் இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்த உண்மையான மக்கள் தொண்டர் என்பதும் நிகழ்வில் பலராலும் வலியுறுத்தப்பட்டது.
இந்நினைவேந்தல் நிகழ்வு, அவரது ஏக புதல்வருமான முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
தந்தையின் மக்கள் சேவைப் பாதையையும் மனிதநேயப் பணிகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வரும் ரஹ்மத் மன்சூர் அவர்கள், மர்ஹூம் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் உயரிய இலட்சியங்களையும் மக்கள் நலச் சிந்தனைகளையும் அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் பணியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதையும் இந்நிகழ்வு மீண்டும் எடுத்துக்காட்டியது.
மர்ஹூம் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் சேவைகளை நினைவுகூர்ந்த இந்த நினைவேந்தல் நிகழ்வு, அவரது பணிகள் காலத்தால் அழியாதவை என்பதையும், அவர் மக்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருப்பார் என்பதையும் மீண்டும் உறுதிப்படுத்திய ஒரு உணர்வுபூர்வமான நிகழ்வாக அமைந்தது.
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்

















0 comments: