📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 பிரதேசமட்ட சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக்குழுக் கூட்டத் தொடர் சிறப்பாக நடைபெற்றது…!
✍️ ஏ.எச்.றகீப்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………………..
✅👉 இறக்காமம் பிரதேச சிறுவர் கண்காணிப்புக் குழுக் கூட்டம், உதவி பிரதேச செயலாளர் திருமதி. என். எப். அய்மா அவர்களின் தலைமையில் 2026.08.19 (புதன் கிழமை) இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் இறக்காமம் பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகளின் சுற்றுச்சூழல், மாணவர்களின் பாதுகாப்பு, கல்வி மற்றும் நலன் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. பாடசாலை கல்வியை இடைநடுவில் கைவிட்ட மாணவர்களை மீள பாடசாலை கல்வியில் இணைத்தல், மாணவர்களின் திறமைகள் மற்றும் ஆற்றல்களை மேம்படுத்துதல், தலைமைத்துவப் பயிற்சி, முதலுதவிப் பயிற்சி மற்றும் வீதிப் போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
ஆபத்தான சூழ்நிலையில் உள்ள சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான வேலைத் திட்டத்தினையும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் இறக்காமம் பொலிஸ் நிலையம் மற்றும் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரிவுகள் இணைந்து செயற்படுத்தப்படவுள்ளன.
இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் குற்றச் செயல்கள், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள், வீட்டு வன்முறைகள், பாடசாலை இடைவிலகல் மற்றும் மாணவர்கள் இளைஞர்களை மையப்படுத்திய போதை பாவனை மற்றும் வியாபாரம் என்பன அதிகரித்து காணப்படுகின்றன.
மேலும், பிரதேச சிறுவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில், பாடசாலை இடை விலகல், கல்வி ரீதியான பிரச்சினைகள், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு, பிரத்தியேக கல்வி நடவடிக்கைகள், சிறுவர்களை மையப்படுத்திய போதைப் பாவனை, இளவயது திருமணம், சிறுவர்களின் சுகாதார மேம்பாடு, விஷேட தேவையுடைய சிறுவர்களின் நலனோம்பல் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டதுடன் அவற்றுக்கான விஷேட வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இக்கூட்டமானது, சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி. பி. யஷோதா அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சிறுவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு ஆளாகாமல் அவர்களைப் பாதுகாத்தல், போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான ஆலோசனை, வழிகாட்டல் மற்றும் மறுவாழ்வு சேவைகளைப் பெற்றுக்கொடுத்தல் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
சிறுவர்களின் பாதுகாப்பு, உரிமைகள், கல்வி, ஆளுமை விருத்தி மற்றும் நலனை உறுதிப்படுத்துவதற்காக எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய பல்வேறு வேலைத்திட்டங்கள் மற்றும் துறைசார் நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைந்த செயற்பாடுகள் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்கு சம்மாந்துறை வலய கல்வி பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். சியாத், மேலதிக மாவட்ட பதிவாளர் எம். ஜே. சுஜாத் மற்றும் பாடசாலை
அதிபர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர், பாடசாலை விடயப் பொறுப்பாசிரியர்கள், மகளிர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவைச் சேர்ந்த உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ. எச். றகீப், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான எம்.எச். வஹாப், எம்.ஐ. பஸீனா, மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.கே. சாஜிதா மற்றும் முன்பிள்ளைப் பருவ சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம். இம்டார், சுற்றாடல் அதிகார சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் வை. பி. யமீனா, அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. றினோஸா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்






0 comments: